சிவபெருமானை கல் எறிந்து வழிபட்டு அருள் பெற்ற நாயனார் / SAKKIYA NAAYANAR

0
312

சிவபெருமானை கல் எறிந்து வழிபட்டு அருள் பெற்ற நாயனார் / SAKKIYA NAAYANAR: இறைவனை வழிபட விரும்புவோர் சொற்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கமான ஒன்று. ஆனால், இறைவனை கல்லெறிந்து வழிபட்டு கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒரே அடியார் சாக்கியர் மட்டுமே. இவருக்கும் அன்பு காட்டி அருள் வழங்கிய இறைவன், திருவிளையாடல் நிகழ்த்திய தலம் காஞ்சிபுரத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில்.

இத்தலத்து இறைவனை திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கி, பவள நிறம் பெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது. பல்வேறு சித்தர்களும் முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கொங்கண முனிவர்.

இறைவனின் திருமேனி புகழை உணர்த்த நினைத்த கொங்கண முனிவர், இறைவனை சோதிக்க நினைத்தார். கொங்கண முனிவரிடம், ஒரு பொருளை எதன் மீது வைத்தாலும் அதனை நீராக்கி விடும் சக்தி கொண்ட குளிகை ஒன்று இருந்தது.

அதனை சிவலிங்கத்தின் மீது வைத்து சோதித்தார் முனிவர். குளிகை நீராக மாறுவதற்கு பதிலாக சிவலிங்கம் அதனை உள்ளே வைத்துக்கொண்டது. இதனைக் கண்டு வியப்புற்ற கொங்கண முனிவர் சிவலிங்கத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி தவம் செய்து பேறு பெற்றார்.

திருச்சங்க மங்கை என்ற ஊரில் வேளாளர் குலத்தில் உதித்தவர் சாக்கியர். காஞ்சிபுரம் சென்று ஞானம் பெறுவதற்குரிய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தார்.

முடிவில் சாக்கிய சமயம் எனப்படும் புத்த மதத்தில் சேர்ந்தார். என்றாலும், அதில் அவர் மனம் அமைதி பெறவில்லை. புறத்தில் புத்த மதத்திற்குரிய காவி உடையை விட்டுவிடாமல், அகத்தில் சிவனடியாராக வாழத் தொடங்கினார் சாக்கியர்.

முதல் முறையாக சிவன் மீது கல்லெறிவதற்குக் காரணமாக அமைந்தது அவரது உணர்வு ஆகும். அவரது செயல் அவருக்கு மன நிறைவையும் அமைதியும் தந்தது. எல்லை மீறிய ஈடுபட்டால் அன்றாடம் அவர் ஈசன் மீது கல்லெறியத் தொடங்கினார். இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றவில்லை.

To Know Moore About – CSL PLASMA PROMO CODE 2024

ஒரு நாள் அவர் ஈசன் மீது கல்லெறிய மறந்து உண்பதற்கு அமர்ந்தார். அப்போது திடீரென சிவபெருமான் மீது கல்லெறிய மறந்ததை நினைத்து சாப்பிடாமல் ஓடிச் சென்று இறைவன் மீது கல்லெறிய கையை தூக்கினார்.

அந்த சமயம் அவரை தடுத்தாட்கொண்ட இறைவன், அவருக்குக் காட்சி தந்து அவரை தனது அடியாராக ஏற்றுக்கொண்டார். அத்துடன் அவரை கயிலைக்கும் அழைத்துச் சென்றார் என்கிறது பெரிய புராணம்.

பழைமையும் பெருமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய சிறிய வாசலும் பழுதடைந்த கதவுகளும் நம்மை வரவேற்கின்றன. உள்ளே நுழைந்ததும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள் உள்ளன.

சற்று தொலைவில் எளிய வடிவில் இறைவனின் கருவறை அமைந்துள்ளது. இடது புறம் விநாயகர் அருகில் நந்தி தேவர் பலிபீடம், அடுத்து இரு ஜோடி லிங்கங்கள் மேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

மூலவர் வீரட்டானேஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவரது பின்புறம் மதிற்சுவர் மாடத்தில் ஆதிமூலவர் காட்சி தருகிறார். இவர் மீது ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன. இவரே சாக்கியரால் கல்லடிபட்டவராக இருக்கக்கூடும்.

இவருக்கு எதிரே விநாயகர், சாக்கிய நாயனார் தனது கைகளில் பெரிய கல்லை பிடித்துக்கொண்டு அதை இறைவன் மீது எறியும் கோலத்தில் காட்சி தருகிறார். இவரைக் காணும்பொழுது கல்லெறிந்து வழிபட்ட சம்பவம் நம் மனத்தில் ஓடுகின்றது.

ஆலயத்தின் வெளிப்புறம் உயரமான கல் மேடையில் சிறிய வடிவில் நந்தி தேவர் இறைவனை நோக்கிக் காட்சி தருகிறார். நந்தி தேவரின் பின்னால் சற்று தொலைவில் ஏகாம்பரேஸ்வரர் கோபுர தரிசனத்தை காண முடிகிறது.

தீய நோக்கம் இன்றி உள்ளன்போடு வழிபடும் எவரையும் ஏற்றுக் கொள்பவன் இறைவன் என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குபவர் வீரட்டானேஸ்வரர். கல் எறிந்து வழிபட்டவருக்கே பேறு தந்து கயிலைக்கு அழைத்துச் சென்ற இறைவன், உள்ளன்போடு தனக்கு திருப்பணி செய்யும் அடியாரை தலை மீது வைத்து தாங்குவான் என்பதில் ஐயமில்லை.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோனேரிக்குப்பம் ரயில்வே கேட்டுக்கு முன்னால் அப்பாராவ் தெருவில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது.