ஆஸ்கர் விருது தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் THE ELEPHANT WHISPERER GETS OSCAR WARDS 2023

'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' குனீத் மொங்கா தயாரிப்பில், ஊட்டியை சேர்ந்த கார்டிகி கோன்ஸால்விஸ் இயக்கத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஆவணப்படம்.  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவரும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது இந்த ஆவணப்படம்.

ஊட்டியில் பிறந்து, கோவையில் இளங்கலை பயின்ற கார்டிகி அனிமல் பிளானட், டிஸ்கவரி உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களில் கேமரா ஆபரேட்டராக பணியாற்றியவர்.  ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான முதுமலை தெப்பக்காட்டில், பணிபுரியும் தம்பதியர் பொம்மன் மற்றும் பெள்ளி குறித்து ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்டு களத்தில் இறங்குகிறார் கார்டிகி.

அங்கே ரகு, பொம்மிக்கு இடையே இவர்கள் கொண்டிருந்த பாசப்பிணைப்பு கார்டிகியின் உள்ளத்தைக் கவர அதை அப்படியே ஆவணப்படுத்துகிறார். கிருஷ்ணகிரி அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு தாயைப் பிரிந்து காயங்களுடன் சுற்றித் திரிந்த குட்டியானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வரப்படுகிறது.  அதற்கு ரகு என பெயரிட்டு பெற்ற பிள்ளைபோல் பராமரிக்கின்றனர் பொம்மனும், பெள்ளியும்.

அதேபோல, 2019 ஆம் ஆண்டு முகாமிற்கு கொண்டுவரப்பட்ட யானைக்குட்டிக்கு பொம்மி என பெயரிட்டு, இரண்டு யானைக்குட்டிகளும் தாயைப் பிரிந்த சோகம் அறியாமல் பார்த்துக் கொண்டனர் இந்த தம்பதியர். இந்த பாசப் பிணைப்பை மிகைப்படுத்தாமல் படமாக்கி இருந்தார் கார்டிகி. கடந்த ஆண்டு ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.