வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தமிழகத்தில் வேலை செய்து வரும் பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.

பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவும் தமிழகம் விரைந்தது. தமிழக அரசு உடனடியாக வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கம் அளித்தது. இதனிடையே, பீகார் மநிலத்தை சேர்ந்தவரும் பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், தனது ட்விட் பதிவில் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தின் போது, சீமான் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக பேசிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.  இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்து ஆய்வு செய்து பார்த்தனர்.  அதில், கடந்த மாதம் 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சீமான் மீது போடப்பட்ட வழக்கில் இந்த 3 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள பிரஷாந்த் கிஷோர்,

இது தொடர்பான செய்தியை தனது ட்விட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரசாந்த் கிஷோர், விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.